Monday, May 21, 2012

சினிமா

வழக்கு எண் 18 /9


வர்க்க உண்மை பேசும்

அபூர்வத் தமிழ் சினிமா...


“இத... இத... இதத்தான் எதிர்பார்த்தோம்!” - என்று இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் வழக்கு எண் 18/9 படம் பார்த்த கையோடு தொலைபேசியில் சொன்னேன். அவர் எப்போதும்போல கலகலவென வெடித்துச் சிரித்தார், பதிலாக. ஆமாம். பாலாஜி சக்திவேல் அதிகம் பேசமாட்டார். ஆனால் தனது படங்களில் அவர் நிறையப் பேசுவார். காதல் படத்தைத் தொடர்ந்து அவரது இந்த வழக்கு எண் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயமாக ஒரு மைல் கல்தான். பொதுவாக நம்ம ஊர் சினிமா கிராம வாழ்க்கையைப் பேசியிருக்கிறது, நகர வாழ்க்கையைப் பேசியிருக்கிறது. ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை விதவிதமாய்ப் பேசியிருக்கிறது. இது ஆதிநாள் தொட்டே தொடர்கிற நடைமுறை. ஆனால் இந்தப் படத்தில் வந்துள்ளதுபோல சமூக யதார்த்தமான-சமூக நிஜமான  வர்க்க வேறுபாடுகளை, அவற்றினூடாக நிலவுகிற முரண் மோதல்களை, வாஞ்சைகளை, வஞ்சனை சூழ்ச்சிகளை இத்தனைக் கலை நயத்தோடு, இத்தனை யதார்த்தமாகச் சித்தரித்த இன்னொரு தமிழ்ப் படத்தை யாராலும் சொல்லமுடியாது என்பதுதான் இந்த வழக்கின் தனிச் சிறப்பு.
வயிற்றுப் பாட்டுக்காக உழைக்கவே நேரம் போதாத எளிய மக்களிடையே இயற்கையாக மலரும் காதல் எத்தகைய தூய தன்மை கொண்டது என்பதையும், உயர் வர்க்க, மத்திய வர்க்கப் பிள்ளைகளின் காதல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதையும் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுகிறார் இயக்குநர். விடலைப் பருவம் என்பது எத்தகைய ஆபத்துக்கள் நிரம்பியதாக இன்றைக்கு ஆகிப்போயிருக்கிறது என்றும் இந்தப் படம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது.  காதலைச் சொல்லுகிறபோதே சமூகத்தில் அதிகார வர்க்கமென்பது பணக்காரர்களுக்கே சேவகம் செய்யும் என்ற நிஜமும் பேசுகிறது. முதலாளித்துவ அரசியல் என்பது எத்தனை வஞ்சகம் நிறைந்தது என்பதைப் பட்டவர்த்தனப்படுத்துகிறது. இத்தனையையும் எளிமையாக, புரிகிற விதத்தில் சொன்னது மட்டுமல்ல, பெரும்பாலும் சினிமா மொழியில் சொல்லியிருப்பது தமிழ் சினிமாவை உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான திசையில் கொண்டுசெல்ல நினைக்கும் இளம் இயக்குநர் கள் எல்லோருக்குமே ஒரு உந்துசக்தியைத் தருவதாக இந்தப் படம் அமைந்துவிட்டது.
இந்தப் படத்தில் இன்னொரு புதுமை என்னவென்றால், நடித்துள்ள அத்தனைபேரும் புதுமுகங்கள். இதனால் படத்தின்மீதான நம்பகத்தன்மை கூடுகிறது. பார்வையாளர்களுக்கு தாங்கள் ஒரு சினிமாவைப் பார்க்கிற உணர்வை விடவும், நடக்கிற சம்பவங்களை அதனருகிலிருந்து வேடிக்கை பார்க்கிற உணர்வையே இயக்குநர் ஏற்படுத்திவிடுகிறார். இது கலையை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள ரசிகர்களுக்குத் துணை செய்கிறது. எனவே அது எல்லோரையும் படத்துடன் ஒன்றிப்போகச் செய்கிறது.
கதையும் எளிய தன்மையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கந்துவட்டிக்கொடுமைக்கு ஆளாகும் கூலி உழைப்பாளியின் மகன் அதிலிருந்து பெற்றோரை மீட்கவேண்டி தனது படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வடநாட்டு முறுக்குக் கம்பெனிக்கு விலை போகிறான். அவன்தான் கதையின் நாயகன் வேலு (அறிமுகம் ஸ்ரீ). அங்கே நடக்கும் கொடுமைகளிலேயே பெரியதான, தனது பெற்றோர் ஊரில் இறந்த செய்தியைக்கூடத் தெரிவிக்காத சுரண்டல் லாப வெறிக் கயவர்களிட மிருந்து தப்பி சென்னை வரும் அவனைக் காப்பாற்றி, தெருவோர இட்டிலிக்கடையில் வேலைக்கும் சேர்த்து விடுகிறாள் பாலியல் தொழிலாளி ஒருத்தி. பக்கத்து அப்பார்ட்மென்ட் வீடு ஒன்றில் வேலை செய்யும் கதையின் நாயகி ஜோதியுடன் (அறிமுகம் ஊர்மிளா மகந்தா) முதலில் மோதலும் பின்னர் ஒருதலைக் காதலுமாக நகரும் தெருவோர வாழ்க்கையில் மணம் வீச வந்துசேர்கிறான் கிராமத்தில் கூத்துக்கலைஞனாகக் குப்பைகொட்ட வழியில்லாத சின்னச்சாமி. ஜோதி வேலை செய்யும் வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆர்த்தியைச் (மணீஷா) சுற்றிச்சுற்றி வந்து, மிகவும் நாகரிகமாகக் காதலிப்பதாகப் போக்குக் காட்டி, மனமெங்கும் விடலையில் திசை மாறும் வக்கிரத்தைச் சுமந்து வருகிறான் தினேஷ்(மிதுன் முரளி). ஜோதி மீதான ஏழை வேலுவின் காதலுக்கு கருணை உள்ளம் கொண்ட அவளை அவன் இறந்துபோன தன் தாயின் வடிவில் பார்ப்பது காரணமாகக் காட்டப் படுகிறது. இதன் மூலம் நயவஞ்சனை அண்டமுடியாத ஏழைகளின் வெள்ளை மனம் நயமாகப் பதிவு செய்யப்படுகிறது. மறுபக்கம், பணக்கார வர்க்கத்து விடலைப் பையன் தினேஷ், தான் காதலிப்பதாக ஏமாற்றும் ஆர்த்தியைத் தனது கைப்பேசியில் ஆபாசப் படமெடுத்து நண்பர்களுக்குக் காட்டும் வக்கிர மனசுக்காரனாகக் காட்டப்படுகிறான். பண பலமும் அரசியல் செல் வாக்கும் உள்ள தினேஷின் தாய் பகட்டாக வருகிறார். தவறான நடத்தை உள்ள அவர் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் வேறு.
தினேஷின் திட்டம் ஆர்த்திக்குத் தெரியவர, அவனிடமிருந்து ஒதுங்கும் அவளைப் பழி வாங்க எண்ணும் அவன், அவளது முகத்தில் அமிலத்தை வீச முயல்கிறான். அது தவறுதலாக வேலைக்காரி யான ஜோதி முகத்தின் ஒரு பக்கத்தைச் சிதைக்கிறது. போலீஸ் கேசில் சந்தேகத்தின் பேரில் வேலு சிக்கவைக்கப்படுகிறான். உண்மைக் குற்றவாளி யார் எனத் தெரிந்தும் அரசியல், பணபலம் இவற்றின் தலையீட்டுக்குக் காவல்துறை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது, பலன் பெறுகிறது என்பதையும், அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நயவஞ்சக நாடகமாடி ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்பதையும் படு இயல்பாகச் சொல்கிறது படத்தின் பிற்பகுதி. ஜோதி எடுக்கும் அந்த முடிவால் இறுதிக்காட்சி எதிர்பாராத இறுக்கத்தோடு நம் மனதை உலுக்கிவிடுகிறது.
படத்தில் இயக்குநரின் பங்களிப்பு அபாரமானது. கந்துவட்டிக்காரன் மிரட்டிவிட்டுப்போகிற போது பின்னணியில் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடல் ஒலிக்கிறதாகட்டும், படிப்பைக் கை கழுவிவிட்டு வேலு ஊரை விட்டுப்போகிறபோது கல்வி பற்றிய அரசு விளம்பரத்தைக் காட்டுவதாகட்டும், வயிற்றுப்பாட்டுக்கே நடுத்தெருவில் லோல் பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகளின் மத்தியில் எதையுமே பொருட்படுத்தாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர வர்க்க மனிதரை ஃபிரேமின் ஒரு ஓரத்தில் காட்டுவதாகட்டும், பள்ளித் தாளாளரான பணக்காரப் பெண் மந்திரியுடன் போனில் பேசும்போது பின்னால் சுவற்றில் முறைகேட்டுச் சாமியார் படத்தை வைத்தவிதமாகட்டும்... இப்படி காட்சிக்குக் காட்சி இயக்குநரின் கவனம் படத்தின் தரத்தையும் கதை சொல்லும் கலையின் நேர்த்தியையும் உயரங் களுக்கு எடுத்துச்செல்கிறது. அதிலும் சிகரம் வைத்தது மாதிரி, பாலியல் தொழிலை வேலுவின் அன்பான வேண்டுகோளுக்காக விட்டுவிடும் காட்சியில் அந்தப் பெண் நடந்துபோகையில் காலில் ‘யூஸ் அன்ட் த்ரோ’ டம்ளரை மிதித்து நசுக்கிவிட்டுப்போகிறாள். பொதுவாக பிளாஸ்டிக் பொருட் களைப் பயன்படுத்திவிட்டால் அதனைக் கசக்கித்தான் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். இது நம்மவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஏன் கசக்கிப் போடவேண்டுமென்றால், யாரேனும் மீண்டும் அதை எடுத்துப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக. இந்த இடத்தில் மறுபடியும் பாலியல் தொழிலுக்காகத் தன்னை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்று அந்தப் பெண் சொல்லாமல் சொல்வதுபோல ஒரு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் டம்ளரை மிதித்து விட்டுப்போவதாகக் காட்டிய உத்தியால் இயக்குநரின் சினிமா மொழி குறித்தான புரிதலையும்,  அவரிடம் பொதிந்துகிடக்கும் சமூக அக்கறையையும் உணரமுடிகிறது.
இயக்குநர் பாலாஜி சக்திவேலுவுக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்ட்டன் காட்சிகளை கதையின் தன்மைக்கேற்ப படு யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். எரியும் அடுப்புக்குள்ளிருந்து சட்டியைக் காட்டுவதும், குடத்துக்குள்ளிருந்து தண்ணீர் நிரப்பும் குழாயைத் தரிசிக்கவிடுவதும் போன்ற புத்தம் புதிய கோணங்கள் படம் முழுவதும் புது அனுபவங்களைத் தருகின்றன. அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவும் ஒத்துழைக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மகுடம் இந்த வழக்கு எண் 18/9. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தச் சமுதாயத்தின் மீதான கலைஞனின் அக்கறை மிகுந்த கோபத்தை சமீப காலத்தில் வேறு யாரும்  இந்தளவு கலை நேர்த்தியுடன் தமிழ் சினிமாவில் சொல்லவில்லை என்னும் நிஜத்தி லிருந்தே நாம் இந்த வழக்கு எண்ணைக் கொண்டாட வேண்டும், கண்டிப்பாகக் குடும்பத்துடன்  தியேட்டர்களுக்குப்போய்ப் படம் பார்ப்பதன் வாயிலாக... தமிழ் வாழ்க்கை வாழும் தமிழ் மனிதர் களை உலவவிட்ட இயக்குநர் பாலாஜி சக்திவேலுவுக்கு ரசிகர்களின் சார்பில் நன்றி சொல்லியபடி!

- சோழ. நாகராஜன்             



  
   

Sunday, May 6, 2012

மலேசியா வாசுதேவன்

கலைக்கும், கலைஞனுக்கும்
எங்காவது மரணம் உண்டா?
-சோழ. நாகராஜன்

"தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தர ராஜன் போலப் பாட யார் இருக்கிறார்?" என்று எனக்கு விபரந்தெரிந்த காலம்தொட்டுக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்குத் தக்கதொரு பதிலாக வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ஆனாலும் அவர் டி.எம்.எஸ். மாதிரியும் பாடவில்லை, வேறு யார்போலவும் பாடவில்லை. அவர் அவர்மாதிரித்தான் பாடினார்.

கே.ஜே.ஜேசுதாஸ் சாயலில்தான் ஜெயச்சந்திரன் குரல் இருக்கிறது என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை உன்னிப்பாகக் கவனிப்பாருக்கு கண்டசாலா நினைவுக்கு வரவே செய்வார். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலும்கூட ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ரகம்தான். இப்படிச் சொல்வதால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கான தனித்துவமே இல்லை என்பதாகாது. ஆனால், இந்த யாரின் சாயலும் இல்லாமல், இந்த யாரையும்விட தனது கம்பீரமான தனித்த குரலைத் தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்குப் பதிவு செய்தவர் டி.எம்.எஸ். தான். தமிழை மிகச்சரியாக உச்சரித்த அவரின் அந்தக் குரலைத்தான் சாதாரண ரசிகன் "ஆண்" குரல் என்று அங்கீகரித்தான். அந்த ஆண் குரலுக்குப் பின்னாளில் வெற்றிடம் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தைப்போக்க தமிழ் சினிமாவிற்குள் வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வாசுதேவன் பிறந்தது மலேசியாவில். பிழைப்பு தேடி மலேசிய ரப்பர் தோட்டத்தைத் தஞ்சமடைந்த அவரது பெற்றோருக்கு அவர் எட்டாவது குழந்தை. மலையாள தேசத்தவர் என்றாலும் சுற்றி வசித்தவர்கள் தமிழர்களென்பதால் தமிழராகவே வளர்ந்தார் வாசு. தமிழ்ப் பள்ளியிலேயே படித்தார். தன்னோடு பிறந்த எல்லோருமே இசையை விரும்புகிறவர்களாய் இருந்தது வாசுதேவன் பாட்டுத்தேவனாகப் பரிணமிக்க ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தந்தது. இசை கற்றிருந்த அப்பாவிடமும், அண்ணனிடமும் ஆரம்பகாலத்தில் இசை பயின்றார். விளையும் பயிர் முளையிலே என்பதற்கு ஒப்ப எட்டு வயதிலேயே மேடையில் பாடத்தொடங்கியவர் மலேசியா வாசுதேவன். அப்போதே அவருக்கு நடிக்கவும் விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த இரண்டு துறைகளிலும் மனிதர் புகுந்துவிளையாடியிருக்கிறார்.

இளஞன் வாசுதேவன் மலேசியாவில் நாடகக் குழுவொன்றில் நடிகராகவும் பாடகராகவும் தனது கலைப் பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, தான் நடித்த "ரத்தப் பேய்" எனும் நாடகத்தைப் படமாக எடுக்க விரும்பி நாடகக் குழுவினரோடு சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் "ரத்தப் பேய்" உருவானது. அந்தப் படத்துக்கு இசையமைத்த அந்நாளைய இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசையில் ஒரு பாடலையும் வாசுதேவன் பாடினார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக அப்போது பணியாற்றியவர் இளையராஜா. அப்போதே மலேசியா வாசுதேவனுக்கு இளையராஜா அறிமுகமாகிவிட்டார்.

இருந்தபோதிலும், மலேசியா வாசுதேவன் பாடிய முதல் தமிழ் சினிமாப் பாடல் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த "டெல்லி டு மதராஸ்" எனும் படத்தில் வரும் "பாலு விக்கிற பத்தும்மா... உன் பாலு ரொம்ப சுத்தம்மா..." என்ற நகைச்சுவைப் பாடல்தான். இதற்கு வி.குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தயாரித்த பொள்ளாச்சி ரத்தினத்துடன் வாசுதேவனுக்கிருந்த நட்பால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இதற்குப் பின்னர் வாசுதேவன் இளையராஜாவின் "பாவலர் சகோதரர்கள்" குழுவில் இணைந்தார். ஒரு நாடகத்தில் அவரது குரலைக் கேட்க நேர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவருக்கு "பாரத விலாஸ்" படத்தில் ஒரு சின்ன வாய்ப்பைத் தந்தார். அது "இந்திய நாடு என் வீடு" என்ற பாட்டில் வரும் பஞ்சாபிக்காரர் பாடும் வரிகள். "சுனோ சுனோ பாய்... சுனோ சுனோ மே பஞ்சாப் வாலா கீத்து சுனோ..." என்று அமைந்த வரிகள் அவை. அதன் பிறகு "தலைப் பிரசவம்" படத்தில் ஒரு பாடல் அவர் பாடினார். குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு "குமாஸ்தாவின் மகள்" படத்தில் "காலம் செய்யும் விளையாட்டு... அது கண்ணாமூச்சி விளையாட்டு..." என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில்தான் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. வாசுதேவன் என்றிருந்த அவரது பெயரை "மலேசியா வாசுதேவன்" என்று முதன்முதலில் மாற்றினார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன்.

இளையராஜா "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பர் மலேசியா வசுதேவனுக்கு தனது "16 வயதினிலே" படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் இதுதான். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.

மூன்று பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்தபோதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.

இளையராஜா அவருக்கு மென்னையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..." (சிகப்பு ரோஜாக்கள்), "வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்..." (புதிய வார்ப்புகள்), "கோடைக் காலக் காற்றே..." (பன்னீர்ப் புஷ்பங்கள்), "பூவே இளைய பூவே... வரம் தரும் வசந்தமே... மடிமீது தேங்கும் தேனே... எனக்குத்தானே..."(கோழி கூவுது), "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..."(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனை அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனான பாடல்கள். இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை"(சரணாலயம்), "எண்ணியிருந்தது ஈடேற..."(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.

முரட்டுக்காளையில் அவர் பாடிய "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் இன்று வரையில் வரும் எல்லாப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்பப் பாசம் இசைக்கும் "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின்  அன்புக்குரல். "பட்டு வண்ண ரோசாவாம்..."(கன்னிப்பருவத்திலே), "பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்..."(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.

மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது "கைதியின் டைரி" படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிகநல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது" என்பது  அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது. சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?

மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தர ராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக்கொண்டிருக்க, சௌந்தர ராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசை ஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத்தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத்தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத்தொடங்கியது. செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இயல்பு. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.

நான் முன்னமே குறிப்பிட்டதுபோல, இன்னொரு புறத்தில் டி.எம்.சௌந்தர ராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப்பாளரை இனங்காண்பது அரிதானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும். அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமலும் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாக எனக்குப்படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது என்பேன். பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான் தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா  துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அதுதானே இன்றும் தேவா போன்றோர் வரையில் தொடருகிறது? அப்படியிருக்க இளையராஜா எதற்காக கதாநாயகர்களுக்காக பின்னணி பாடினார்? இந்தப் பாடலின் பொருளுடன் உடன்படாவிட்டாலும், "அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் ஒட்டி நின்று குப்பையாக வந்த உடம்பு" (குணா) என்று பாடிய இளையராஜாவை ரசித்த அளவுக்கு அவர் பாடிய டூயட் பாடல்களை என்னால் ரசிக்கமுடியவில்லையே. எங்களாலும் சமஸ்கிருதத்தை ஸ்பஷ்டமாக உச்சரிக்க முடியும் என்று நிரூபித்த அவரின் "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" பாடலை அந்தக் காரணத்துக்காக ரசித்தவர்களால்கூட அவரது வேறு பல டூயட்களை முழுசாக ஏற்க முடியவில்லைதானே?

இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது. அதிலும் குறிப்பாக "பூங்காற்று திரும்புமா" பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பை கொளுந்துவிட்டு எரியச்செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப்போடுகிறது பாடுகிற பாட்டுக்காரனின் கிரங்கடிக்கும் குரல் இனிமை.

எத்தனைக் காலமானாலும் இறவா வரமல்லவா அந்தப் பாடல்கள் வாங்கி வந்திருக்கின்றன. பாடிவிட்டுச் சென்றவனைக் காலம் தின்று, ஏப்பமிட்டுவிட்டபோதிலும், அவன் விட்டுச்சென்ற அவனது குரலை எப்படி மறுதலிக்கும் காற்றும், காதுகளும் சொல்லுங்கள்? கலைஞன் எப்படிக் காலமாவான்? ஆமாம், மலேசியா வாசுதேவனுக்கும் மரணம் என்பது இல்லவே இல்லைதானே?